ஊரே மூழ்கி கொண்டிருந்தது.
கடவுள் பக்தி நிறைந்த ஒருவன்
வெள்ளத்தில் சிக்கி எப்படியோ தட்டு தடுமாறி
ஒரு மரத்தை பற்றி அதன் மேல தொத்தி கொண்டு
உயிரை கையில் பிடித்த படி
கடவுளே காப்பாற்று கடவுளே காப்பாற்று என்று
வழிபட்டு கொண்டிருந்தான்.
அந்த வழியாய் படகில் வந்த ஒருவர்
மரத்தில் இருப்பவனைப் பார்த்து என்னுடன் வாருங்கள்
பத்திரமாய் கூட்டிச் செல்கிறேன் என்றார்.
அவன் இல்லை என்னை
கடவுள் காப்பாற்றுவார் என்றான்.
அடுத்து வானூர்தி ஒன்று அவனை நோக்கி வந்து
கயிறை போட்டது.
ஐயா பிடித்துக் கொண்டு மேலே வாருங்கள் என்றார்
வானூர்தியிருந்தஒருவர்.
இல்லை இல்லை நான் வரமாட்டேன்.
கடவுள் நிச்சயம் வருவார் என்றான்.
மரம் முறிந்துவிடும் நிலையில் இருக்க,
மீண்டும் நிவாரணப் பணியில் இருந்த
இன்னொரு படகு வந்து அவனை அழைக்கிறது.
எவ்வளவோ கேட்டும் பிடிவாதமாய்
என்னை கடவுள் ஏமாற்றவே மாட்டார்,
நான் உங்களுடன் வரமாட்டேன் என்றான்.
மரமும் முறிந்தது.
கடவுளே கடவுளே என பிதற்றிய படியே
வெள்ளத்தில் மூழ்கி இறந்தான்.
அவன் ஆத்மா கடவுளைக் காண்கிறது.
சினத்துடன் நீயெல்லாம் ஒரு கடவுளா?
உன்னை எப்படியெல்லாம் நம்பி பூஜித்தேன்.
நீ ஏன் என்னை காப்பாற்றவில்லை? என்றான்.
அட முட்டாள் மானிடனே,
உனக்காகவே இரு முறை படகில் வந்து அழைத்தேன்
நீ வரவில்லை.
ஒரு முறை வானூர்தியில் வந்தேன்.
உன்னால் என்னை அடையாளம் கூட கண்டுகொள்ள
முடியவில்லை.
பிறகு எப்படி உன்னைக் காப்பாற்ற? என்றார்.
அவன் வாயடைத்துப் போனான்.
தெய்வம் இப்படி தான் இருக்கும்
இந்த ரூபத்தில் தான் வரும் என்று நினைத்ததும்,
“மனிதனின் அன்பிலும் ஆபத்து காலத்தில்
அவன் செய்யும் உதவியிலும்
தெய்வத்தின் குணம் இருக்கிறது”
என்பதையும் அறிய மறுத்ததே
அந்த ஆத்திகனின் தவறு.
Comments
Post a Comment